Skip to main content

கந்துவட்டி பிரமுகர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி; கத்திகுத்தில் ஒருவர் காயம்

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
v


வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் பாலகணேஷ். வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர்களுக்கு இவர் நன்றாக அத்துப்படி. பிரபலமான பைனான்சியர், கந்துவட்டிக்கு பணம் தருபவரும் கூட.


வாணியம்பாடி பெரியப்பேட்டையில் உள்ள இவரது வீட்டிலேயே வட்டி அலுவலகமும் உள்ளது. எவ்வளவு பணம் கேட்டாலும், ஆவணங்களை வாங்கிக்கொண்டு உடனே தருவார் என்பதால் இவரை பார்க்க பலரும் இவரது வீட்டுக்கு வருவார்கள். அப்படித்தான் இன்று அக்டோபர் 23ந்தேதி மதியம் 2 மணியளவில் 4 பேர் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். வேகவேகமாக வந்தவர்கள், சடாரென கதவை தட்டி உள்ளே நுழைய அவர்களை பாலகணேஷ்சின் உதவியாளர் காளி தடுத்து நிறுத்தி நீங்க யாரு எனக்கேட்டுள்ளார். காளியின் கழுத்தை பிடித்த ஒருவன் பணமெல்லாம் எங்கே இருக்கு எனக்கேட்டு மிரட்ட , காளி சொல்லாமல் இருந்ததும் கோபத்தில் காளியை கத்தியால் குத்தி ஒருவன் தள்ளிவிட்டு விட்டு தேடத்துவங்கியுள்ளனர்.

 

v


காளி மற்றும் வீட்டில் இருந்தவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கவாசிகள், தெருவில் சென்றவர்கள் பாலகணேஷ் வீட்டின் முன் ஓடிவந்தனர். மக்கள் ஓடுவருவதை பார்த்தவர்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடத்துவங்கினர். வெளியே காத்திருந்த பொதுமக்கள் தப்பி ஓடியவர்களில் ஒருவனை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். கத்தி குத்துப்பட்ட காளியை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் வாணியம்பாடி நகர காவல்நிலையத்துக்கு தகவல் தந்தனர். உடனடியாக சம்பவயிடத்துக்கு வந்த போலிஸாரிடம், கொள்ளையடிக்க வந்தவனை ஒப்படைத்தனர். தனது பெயர் ராகுல் எனக்கூறியுள்ளான். அவனிடமிருந்து சிறிய கத்தி, மிளகாய்பொடி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்கள் யார், யார் என விசாரணை நடத்திவருகின்றனர் போலிஸார்.


பட்டபகலில் 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க முயற்சித்ததோடு, தடுக்க வந்த ஒருவரை கத்தியால் குத்தியது வாணியம்பாடி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்