கோழிக் கறியில் கரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறது என்று நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குகிறேன் என வேதாரண்யம் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் நூதன அறிவிப்பு பலகையை வைத்திருப்பது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி புரட்டிப்போட்டுவரும் கரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே கோழி இறைச்சி சாப்பிட்டதால்தான் கரோனா வைரஸ் வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை கடுமையாகவே வீழ்ச்சி அடைந்தது. வைரஸ் பீதியின் காரணமாக அசைவ ஓட்டல்களில் சிக்கன் பிரியாணி, ஆம்லெட் சிக்கன் 65 போன்றவற்றை சாப்பிடுவதை மக்கள் தவிர்க்கின்றனர். இதனால் பல அசைவ ஹோட்டல்கள் மூடும் நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அந்த ஓட்டலின் உரிமையாளர் ஓட்டல் வாசலில் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி இருக்கிறார். அந்த நோட்டீசில் கோழிகள் மூலம் வைரஸ் பரவுவதாக நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தருகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நோட்டீஸை கண்ட பலரும் ஆச்சரியத்துடன் பேசிவருன்றனர்.