ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றும் மாரிமுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “நான் தனியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறேன். என்னிடம் காரைக்குடியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி முதல்வர் மயில் வாகனன், அழகப்பா கல்லூரி பேராசிரியர் ரமேஷ் பாபு, சென்னையைச் சேர்ந்த ரவிராஜன் மற்றும் தங்கபாண்டியன் ஆகியோர் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி வாங்கித் தருவதாக கூறினர். இதற்காக ஒன்றரை கோடி ரூபாயை வழங்க வேண்டும் எனக் கூறினர். அதன் அடிப்படையில் ரவிராஜன் வழங்கிய மூன்று வங்கி கணக்கில் 95 லட்ச ரூபாயைச் செலுத்தினேன்.
ஆனால், நீண்ட காலம் ஆகியும் துணைவேந்தர் பதவி வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அது குறித்து கேள்வி எழுப்பியதால் 18 லட்சத்தை திருப்பி வழங்கினர். ஆனால், மீதமுள்ள தொகையை வழங்கவில்லை. இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்த நிலையில், விசாரணை நடத்தியும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இந்த வழக்கு விசாரணையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், பண மோசடி செய்தவர்கள் காவல்நிலையத்தில் ஆஜராகி பணத்தைத் திருப்பி கொடுத்து விடுவதாக எழுதி கொடுத்ததால் புகாரை முடித்து வைத்தோம் எனத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நீதிபதி, “மனுதாரர் கொடுத்த புகார் தீவிரமானது. இது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது என்பதால், முடித்து வைத்த விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும். மேலும், மனுதாரர் பண மோசடி குறித்து புதிய புகார் மனுவை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்க வேண்டும். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.