கோவையில் உள்ள ஈஷா மையம் குறித்தும், அந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால், ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், நக்கீரன் இதழ் குறித்தும், நக்கீரன் ஆசிரியர் குறித்தும் வெறுப்பு கருத்துக்களைப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டிருந்தார். தன் மகனின் கைதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் கோவையில் போராட்டம் நடத்திய நிலையில் அவரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஓம்கார் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் தினமும் காலை 10:30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை வழங்கி ஜாமீன் வழங்கியுள்ளது.