மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகித் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான 7.5% உள் இட ஒதுக்கீட்டில் உள்ள 497 எம்.பி.பி.எஸ் மற்றும் 110 பி.டி.எஸ் இடங்களுக்கானக் கலந்தாய்வு வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் தொடங்கி 3 கட்டங்களாக நடக்கிறது.
இதில் முதல் கட்ட கலந்தாய்வில் 569 மதிப்பெண் முதல் 361 மதிப்பெண் வரை பெற்ற 442 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 360 மதிப்பெண் முதல் 320 மதிப்பெண் வரை பெற்றவர்களும் 3ம் கட்ட கலந்தாய்வில் 319 முதல் 285 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து முதல் கட்ட கலந்தாய்வில் 12 மாணவ, மாணவிகளும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 17 மாணவ, மாணவிகளும், 3 ஆம் கட்ட கலந்தாய்வில் 19 மாணவ, மாணவிகளும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கம் போல தொடர்ந்து சாதித்து வரும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் கட்ட கலந்தாய்வில் 3 பேரும், 2ம் கட்ட கலந்தாய்வில் 2 பேரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 7.5% உள் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்த பிறகு கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 12 பேர் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அதேபோல இந்த ஆண்டும் கூடுதல் மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர்.