நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் கல்குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 300 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட ஆறு தொழிலாளர்களில் விஜய், முருகன் என்ற இரண்டு தொழிலாளர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக மீட்கப்பட்ட செல்வம் என்ற நபர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் நான்காவது நபராக லாரி கிளீனர் முருகன் என்பவர் மீட்கப்பட்டுள்ளார். நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளத்தைச் சேர்ந்தவர் லாரி கிளீனர் முருகன். இவரும் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார். இதனால் கல்குவாரி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்ளே உள்ள மூன்று ஹிட்டாச்சி இயந்திரங்கள், இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் அதனுள்ளே சிக்கியுள்ள இரண்டு லாரி ஓட்டுநர்கள் இரண்டு பேரை மீட்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய இரண்டு ஓட்டுநர்கள் மட்டும்தான் இன்னும் மீட்கப்பட வேண்டும். இவர்கள் இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் உடல் சுமார் 10 மீட்டர் ஆழத்தில் புதைந்திருப்பதாக நேற்று மீட்புப் படையினர் தெரிவித்திருந்தனர். தற்பொழுது வீரர்கள் கயிறு கட்டி உள்ளே இறங்கியிருக்கும் நிலையில் கூடங்குளத்தில் இருந்து ராட்சத கிரேன் ஒன்றை கொண்டுவந்து அதன் வாயிலாக உள்ளே சிக்கியுள்ளவர்கள் மீட்க திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் செல்வம், லாரி கிளீனர் முருகன் இறந்த நிலையில் ராஜேந்திரன், செல்வகுமாராவது உயிருடன் மீட்கப்படுவார்களா? என வேதனையுடன் காத்திருக்கின்றனர் அவர்களது உறவினர்களும், அடைமிதிப்பான்குள மக்களும்.