சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (23/12/2021) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து 34 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 34 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன. அந்த 34 பேரில் 30 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது.
கரோனா உறுதியான 114 பேரில் 57 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்ததால் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சென்னையில் 26, மதுரையில் 4, திருவண்ணாமலையில் 2, சேலத்தில் 1 என ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான தலைச்சுற்றல் போன்ற சிறுசிறு பாதிப்புகளுடன் உள்ள 34 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விமான நிலையங்களைக் கண்காணிக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒமிக்ரான் வகை கரோனா பாதிப்பில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. மஹாராஷ்ட்ராவில் 65, டெல்லியில் 64, தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.