வாசகர்கள் நக்கீரனைத் தொடர்புகொண்டு, “எங்க ஏரியாவுல இப்படியெல்லாம் நடக்குது. இதைச் செய்தியா வெளியிட்டீங்கன்னா.. எங்க பிரச்சனை முடிவுக்கு வரும்.” என்று நம்பிக்கையோடு பேசுவார்கள்.
அப்படி திருநெல்வேலி மாவட்டம், மேலநரிக்குடி, கீழத்தெருவில் வசிக்கும் அய்யாத்துரை நம்மிடம், “எங்க பூர்வீக இடத்துல எங்க ஊர்க்காரங்க, சாவு வீட்ல நடத்துற காரியங்களுக்கு பயன்படுத்துன பந்தல் கால், வாழை, தென்னை மட்டை, இளநீர் கழிவுகளைப் போட்டுட்டு இருந்தாங்க. இப்ப நாங்க வீடு கட்டி குடியேறிட்டோம். மயானக்கரை பக்கம் 19 ஏக்கர் இடம் இருக்கு. ஆனா, சிலரோட தூண்டுதல்ல இப்பவும் இறந்த வீட்டு கழிவுகளை எங்க வீட்டுக்கிட்டயே போடுறாங்க. கெட்ட நாத்தம் அடிக்குது. வீட்ல இருக்கிற சின்னப் புள்ளைங்க, அந்தக் கழிவுகளைப் பார்த்துப் பார்த்து பயப்படறாங்க. நான் தேவர்குளம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் பண்ணேன். வன்னிக்கோனேந்தல் சுகாதார ஆய்வாளர்கிட்டயும் மனு கொடுத்தேன். போலீஸ்காரங்க வந்து ஊர்க்காரங்ககிட்ட பேசிப் பார்த்தாங்க. அவங்க சொன்னத யாரும் கேட்கல. அடுத்து கலெக்டர் கிட்ட புகார் கொடுக்கணும். எனக்கு தெரிஞ்சு, இந்த விஷயத்துல ஊர்க்காரங்களுக்கு ஆதரவா இருக்கிறது பஞ்சாயத்து தலைவர் சந்திராவோட வீட்டுக்காரர் பெருமாள்சாமி தான். எங்க கஷ்டமும் வேதனையும் அவருக்கு புரியல.” என்று வேதனைப்பட்டார்.
நாம் பெருமாள்சாமியைத் தொடர்புகொண்டோம். “ஆமாங்க... விஷயம் போலீஸ் வரைக்கும் போயிருச்சு. அடுத்து சர்வேயர் வந்து இடத்த அளந்து பார்ப்பாருன்னு சொல்லிருக்காங்க. இறந்த வீட்டு கழிவுகளை வேற எங்கே போடறதுன்னு இனிமேல்தான் முடிவு பண்ணனும்.” என்று அலுத்துக்கொண்டார். தேவர்குளம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அருண்ராஜுவிடம் பேசினோம். “அய்யாத்துரை குடும்பம் பரிதவிக்கிறதுல நியாயம் இருக்கு. இந்த விஷயத்துல அவருக்கு ஒரு தீர்வு கிடைக்கணும். அதான் வருவாய்த்துறை வி.ஏ.ஓ.கிட்ட பேசிருக்கோம். நீர்நிலைப் புறம்போக்கா இல்லாம, நத்தம் புறம்போக்கு நிலத்துல வருவாய்த்துறை இடம் ஒதுக்கி கொடுத்துச்சுன்னா இந்த பிரச்சனை சரியாயிரும்.” என்றார்.