சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யா. இவர் தி.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்துள்ளார். அதே ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்ற இளைஞர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சதீஸ் அப்பெண்ணை ஆத்திரத்தில் ரயில்வே ட்ராக்கில் தள்ளிவிட்டுள்ளார்.
அப்பொழுது சென்னை கடற்கரை நோக்கிச்செல்லும் மின்சார ரயில் சத்யாவின் மீது மோதி சம்பவ இடத்திலேயே இளம்பெண் தலை துண்டாகி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர் சதீஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை காவல் ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த சதீஸை பிடித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தனது மகள் சத்யா இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தை மாணிக்கம் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முதலில் சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் மாணிக்கத்தை பரிசோதித்த பொழுது அவர் ஏற்கனவே இறந்து இருந்தது தெரிய வந்தது.
மேலும் காவல்துறையினர் மாணவியின் தந்தை உயிரிழந்ததை விசாரித்தனர். விசாரணையில், மாணிக்கம் மகளை இழந்த துக்கம் தாளாமல் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார் என்பதும் விஷம் கலந்த மதுவை குடித்ததால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு அதனால் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.