புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு அருகில் உள்ள புள்ளாண்விடுதி கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஓம்சக்தி வழிபாட்டு மன்றம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். அப்பகுதியில் பல இனத்தவர்கள் வசித்தாலும் அனைவரும் ஒன்றாக மாலை அணிந்து ஓம்சக்தி கோயிலுக்குச் சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று (05.01.2021), மாலை அணிந்திருந்த பக்தர்கள் ஓம்சக்தி வழிபாட்டு மன்றத்தில் பஜனை செய்து கோயிலுக்குப் புறப்பட தயாராகி, அதற்காக பந்தல் அமைத்திருந்தனர். ஆனால் இன்று அதிகாலை கோயிலில் இருந்து பலமான சத்தம் கேட்டது. அப்பகுதி பொதுமக்கள் ஓடிச் சென்று பார்த்தபோது ஓம்சக்தி கோயிலுக்குள் பலமான காகித வெடி வெடித்து மேற்கூரைகள் உடைந்து விழுந்ததுடன், கோயில் முழுவதும் காகிதங்கள் சிதறிக் கிடந்தன.
தகவல் அறிந்து திரண்டு வந்த அப்பகுதி பக்தர்கள் அதனைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் “கடந்த வருடமும் இதேபோல ஒரு சிலர் கோயில் மேல் கூரையை உடைத்துவிட்டனர். அப்போதே வடகாடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் யாரையும் கைது செய்யவில்லை.
அந்த துணிச்சலில்தான் மறுபடியும் வெடி வைத்துக் கோயிலை உடைத்திருக்கிறார்கள். இப்போதும் வடகாடு போலீசார் சம்பவ இடைத்தை வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.