நாமக்கல் அருகே, கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரை நள்ளிரவில் மர்ம நபர்கள் கட்டில் காலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர், ஒலிபெருக்கிக் கடை நடத்தி வந்தார். இத்துடன், அதிமுக பேரூர் செயலாளர் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் கடையிலும் வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் பாஸ்கரின் வீட்டின் பின்புறம் உள்ள வீட்டில் சுப்ரமணி தனியாக வசித்து வந்தார். ஜூன் 5 ஆம் தேதி இரவு வழக்கம்போல் பணிகளை முடித்துக்கொண்டு, வீட்டின் முன்பு கட்டிலில் படுத்துத் தூங்கினார். அப்போது மர்ம நபர்கள், கட்டில் காலை உடைத்து, அந்த கட்டையால் சுப்ரமணியின் தலையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
அன்றாடம் காலையில் அருகில் வசிக்கும் மூத்த மகனின் வீட்டுக்கு தேநீர் குடிக்கச் செல்லும் சுப்ரமணி காலையில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் சுப்ரமணியை தேடிச்சென்று பார்த்தபோதுதான் அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் நிகழ்விடத்தில் தடயங்கள், விரல் ரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய், நிகழ்விடத்தில் இருந்து மலையம்பட்டி சாலையில் ஒரு கி.மீ. தொலைவிற்கு ஓடிச்சென்றுவிட்டு திரும்பவும் வந்துவிட்டது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட சுப்ரமணிக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? அவர் வீட்டில் ஏதேனும் பணம், நகைகளை சேர்த்து வைத்துள்ளாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.