சென்னை வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் வயதான முதியவர் ஒருவர் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் வேலன் நகரை சேர்ந்தவர் மூதாட்டி லட்சுமி (74). இவர் வழக்கம் போல் அருகில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு வீட்டிற்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர், மூதாட்டி லட்சுமி அருகில் வண்டியை நிறுத்தி முகவரி கேட்பது போல் ஒரு துண்டு சீட்டை காண்பித்து பேச்சுக்கொடுத்தார். அப்போது திடீரென மூதாட்டி லட்சுமி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்த அந்த முதியவர், உடனடியாக அதனை வாயில் லாவகமாக கவ்விக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச்சென்று விட்டார்.
இதையடுத்து, மூதாட்டி லட்சுமி சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது கே.கே.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் கைவரிசை காட்டி வரும் முதியவர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
முதியவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்தும், அவரின் தோற்றத்தை வைத்தும் முதியவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக செயின் பறிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமே ஈடுபட்டு வருவார்கள். ஆனால் வயதை கருதாத இந்த முதியவர் துணிந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு காவல்துறைக்கு சவால் விடுத்து வருகிறார்.