தமிழ்நாடு முழுவதும் பருவ மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்குக் கனமழை பெய்திருக்கிறது. கடந்த சிலதினங்களுக்கு முன்பாக வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று மாலை சென்னை மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையை கடந்தது. இதனால், நேற்று சென்னையில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுவீசியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
இதில் ஆங்காங்கே இன்னும் தண்ணீர் தேங்கி நிற்பதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சில இடங்களில் மழை நீர் சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையில் மின் இணைப்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், சென்னை, மந்தவெளி பேருந்து நிலையம் அருகே மழை நீரில் நடந்து சென்றபோது முதியவர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தந்தனர். அதனைத் தொடர்ந்து அங்குவந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அவரது உடலை மீட்டனர். இறந்தவர் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.