ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைக் கிராமம், கல்வாரை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (73). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து பொன்னுசாமி, அந்தியூர், எண்ணமங்கலம், ஆலயங்கரட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் தனது மகன் பழனிசாமி(40) வீட்டில் வசித்து வந்தார். பழனிசாமி லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னுசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளார். பொன்னுசாமி அடிக்கடி, அவரது அக்கா வீட்டுக்குச் சென்று 2,3 நாள்கள் தங்கிவிட்டு பின்னர் மகன் வீட்டுக்கு வருவது வழக்கமாம். அப்படி தனது அக்கா வீட்டுக்குச் சென்று வருவதாகக் கடந்த 20ம் தேதி கூறிவிட்டுச் சென்ற பொன்னுசாமி, 3 நாள்களாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, அவரது அக்கா மாதம்மாளிடம் விசாரித்தபோது, அவர் அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் பொன்னுசாமி கிடைக்கவில்லை. இந்த நிலையில், கோவிலூர் புதுக்கரடு, வறட்டுமலை வனப் பகுதியில், மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக மகன் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உறவினர்களுடன் அங்கு சென்ற பழனிசாமி, அழுகிய நிலையில் இருந்த தனது தந்தை பொன்னுசாமியின் சடலத்தை மீட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.