பெண்களுக்கிடையிலான வாய்ச்சண்டையில் வார்த்தைகள் தெறித்துவிழும்போது ‘கண்ணகி சாபமா பலித்துவிடுவதற்கு?’ என்று கிராமங்களில் கேலி பேசுவதுண்டு. அவன் கருநாக்குக்காரன்.. சொன்னால் கட்டாயம் பலிக்கும் என்று ஆண்களும்கூட முற்காலத்தில் விதைத்துவிட்டுப்போன மூடநம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பீதி கிளப்புவதுண்டு.
மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகிலுள்ள குப்பல்நத்தம் ஆண்டிபட்டியில் முதியவர்கள் இருவருக்கிடையே முன்பு நடந்த வாய்ச் சண்டை ஒரு கட்டத்தில் ஆழமான பகையாகி கொலையில் முடிந்திருக்கிறது. முதியவர் முத்தையா கொலை வழக்கில் கைதான பின்னணி இது; முதியவர்களான ஆழியும் (வயது 80) முத்தையாவும் (வயது 70) மூன்று வருடங்களுக்கு முன் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தாக்கப்பட்ட ஆழி, முத்தையாவைப் பார்த்து ‘உன் குடும்பமே அழிந்து போகும்’ என சாபம் விடுவதுபோல் திட்டியிருக்கிறார். அங்கிருந்தவர்களும் முத்தையாவிடம் ‘ஏழ்மை நிலையில் உள்ள சலவைத் தொழிலாளியான ஆழியின் சாபம் உன்னைச் சும்மா விடாது’ என்று வெறுப்பேற்றி அனுப்பியுள்ளனர்.
அடுத்தடுத்த ஆண்டுகளில், முத்தையாவின் இளையமகன் முத்துராஜா இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்ததும், மூத்தமகன் மூர்த்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதும் நடந்திருக்கிறது. அதனால் விரக்தியின் உச்சத்திலிருந்த முத்தையா ‘ஆழியின் சாபமே தன் மகன்கள் சாவுக்குக் காரணம்’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
தனது கிராமமான சின்னக் கட்டளைக்கு வந்த ஆழியை ‘மது அருந்துவோம்’ என முனியாண்டி கோவில் நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் முத்தையா. இருவரும் மது அருந்தியபோது போதையின் உச்சத்திலிருந்த முத்தையா ‘நீ விட்ட சாபத்தால் தான் என்னோட ரெண்டு மகன்களும் செத்தாங்க..’ என்று உளறிய படி, மது பாட்டிலை உடைத்து ஆழியின் கழுத்தில் குத்தியிருக்கிறார். பலத்த காயத்துடன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட ஆழி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலேயே உயிரிழக்க, காவல்துறையினரால் முத்தையா கைது செய்யப்பட்டுள்ளார்.
மூடநம்பிக்கையால் முதியவர் ஆழியின் உயிரைப் பறித்த முதியவர் முத்தையாவுக்கு சிறைக் கம்பிகளை எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.