சரக்கு லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர்களை குறிப்பிட்ட நிறுவனங்களில் தான் வாங்கி பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் நெருக்கடிகளைக் கண்டித்து, டிசம்பர் 27- ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தென்மண்டல லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா சேலத்தில் திங்களன்று (டிச. 7) செய்தியாளர்களிடம் கூறியது:
“வேகக்கட்டுப்பாட்டு கருவியை குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கருவி அண்டை மாநிலங்களில் 1500 ரூபாய்தான். ஆனால் அரசு பரிந்துரை செய்துள்ள 8 நிறுவனங்களில் இந்த உபகரணத்தை 10 ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதேபோல, ஒளிரும் ஸ்டிக்கர்களையும் கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடுகிறது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது.
இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மாநிலங்களில் வழக்கு போடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் சோதனைச் சாவடிகளில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓவர் லோடு லாரிகளை விட்டு விடுகின்றனர்.
கரோனா காரணமாக, அண்டை மாநிலங்களில் காலாண்டு வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்துள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்ற 2 வார கால அவகாசம் கொடுத்திருக்கிறோம். அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, டிச. 27- ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சரக்கு லாரிகள் ஓடாது. காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும்.
மாநிலம் முழுவதும் 4.50 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநிலங்களில் இருந்து சரக்குகள் தமிழகத்திற்குள் வராது. லாரிகள் எல்லைகளிலேயே நிறுத்தப்படும். விவசாயிகளுக்காக டிச. 8- ஆம் தேதி நடத்தப்படும் பாரத் பந்த் போராட்டத்தில் தென்மாநில லாரி உரிமையாளர் சங்கமும் பங்கேற்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 8- ஆம் தேதி காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை லாரிகள் இயங்காது” இவ்வாறு சண்முகப்பா கூறினார்.
மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தனராஜ், மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.