திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி சீனியம்மாள். இவர்களுக்கு 5 மகன்கள், 4 மகள்கள். இதில் ஒரு மகன் ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது 100-வது பிறந்த நாளை நேற்று 5 தலைமுறை பேரன், பேத்திகளுடன் கொண்டாடினார். சீனியம்மாள் சிறு வயது முதல் இன்று வரை சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது பேரன், பேத்திகள் ஹோமியோபதி, ஆயுர்வேதிக் போன்ற படிப்புகளை படித்து மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தனது 75-வது வயதில் கணவனை இழந்த நிலையில், இவர் முழுமையாக கீரை வகை, நாட்டு சுண்டைக்காய், பச்சை காய்கறிகள், நாட்டுக்கோழி ஆகியவற்றின் சிறப்புகளை அறிந்து அன்று முதல் ஆரோக்கியமான உணவுகளை உண்பதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது 100 வயதைக் கடந்த போதிலும் சமையல் செய்வது தினம்தோறும் மற்ற வேலைகளில் ஈடுபடுவது என ஆரோக்கியமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது 100-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த இவரது வாரிசுகள், அதை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று தங்களது சொந்த கிராமமான நத்தம் அருகே உள்ள லிங்கவாடியில் ஒன்று கூடினர். இவரது 7 மகன், மகள்கள், 23 பேரன், பேத்திகள், 27 கொள்ளு பேரன், பேத்திகள், 4 எள்ளு பேரன், பேத்திகள் உள்ளிட்ட மொத்தம் 85 பேர் மற்றும் கிராம மக்கள் நேற்று வீட்டிலிருந்து ஒன்றிணைந்து சீனியம்மாளை ஊர்வலமாக அழைத்து வந்து மந்தை அருகே உள்ள கோயிலில் மரக்கன்றுகளை நட்டனர். அதைத் தொடர்ந்து ஊர்வலமாக அழைத்துச் சென்று விநாயகரை வழிபடச் செய்தனர். இப்படி ஐந்து தலைமுறைகளுடன் நூறாவது பிறந்த நாளை சீனியம்மாள் குடும்பத்தினர் கோலாகலமாக கொண்டாடினார்கள்.