திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் முழுவதும், கஞ்சா வியாபாரிகளை அடையாளம் கண்டு கைது செய்வதும், கடத்திவரப்பட்ட கஞ்சா பொட்டலங்களையும் மூட்டைகளையும் பறிமுதல் செய்வது, கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீஸ் எடுத்துவருகிறது.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பை செலுத்திய காவல்துறையினருக்கு, கூட்டேரிப்பட்டு அருகில் மூதாட்டி ஒருவர் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த மூதாட்டியின் செல்போன் எண்ணை வைத்து அவரது லொகேஷனை கண்டறிந்தனர். அதன் மூலம் கூட்டேரிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை அடையாளம் கண்டு மயிலும் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி, உதவி ஆய்வாளர்கள் மகாலிங்கம், ஞானசேகர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிப்பட்ட அவரிடம் நடத்திய சோதனையில் ஒரு கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், திருநெல்வேலியைச் சேர்ந்த சிவஞானம் மனைவி விஜயா(60) என்பது தெரியவந்தது. தற்போது அவர் விழுப்புரம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதும், அந்த வாடகை வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் பாட்டி விஜயாவை விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 10 கிலோ அளவில் கஞ்சா இருந்தது அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூதாட்டி விஜயா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள மூதாட்டி விஜயா மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.