நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது.
ஓபிஎஸ் தரப்பு மற்றும் பாஜக இடையே மூன்று முறை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த இரண்டு இடங்களிலும் தாமரை சின்னத்தில் தான் ஓபிஎஸ் தரப்பு போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், இதற்கு ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகவும் தொடர்ந்து இதற்காக எவ்வளவு முறையும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால், ஒரே முடிவாக தேர்தலை ஓபிஎஸ் தரப்பு புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு 'அதிமுக தொண்டர்கள் மீட்பு இயக்கம்' என நடத்திவரும் நிலையில் ஒருவேளை பாஜகவின் நிபந்தனைப்படி தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அதன் பிறகு அதிமுக மற்றும் இரட்டை இலை ஆகியவைக்கு ஓபிஎஸ் உரிமைகோர முடியாது என்பதால், இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்பட்ட நிலையில் அந்த தகவல் வதந்தி என ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் எந்த சின்னத்தில் போட்டி என்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் தாமரை சின்னத்தில் களம் காண விரும்புவதாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜே.சி.டி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்பது தொடர்பாக தெளிவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஓ.பி.ஆரின் இந்த முடிவுக்கு பின், இரவோடு இரவாக சொந்த ஊரான திருச்சிக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எஞ்சிய நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என ஓபிஎஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.