நெல்லையில் தொழுகைக்காகத் தர்காவிற்கு வந்திருந்த தம்பதியினரின் இரண்டு வயது குழந்தை கடத்தி செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்பொழுது குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ளது புகழ்பெற்ற ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா. இந்த தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்து கடவுளை வழிபடுவோரும் வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன்களைச் செலுத்துவது வழக்கம். சில நேரம் வெளிநாடுகளில் இருந்தும் இந்த தர்காவிற்கு மக்கள் வந்துசெல்வர். இந்த நிலையில் கடையநல்லூரில் இருந்து சாஹுல் ஹமீது-நாகூர் மீரா என்ற தம்பதியினர் ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவிற்கு வந்திருந்து அங்கு தங்கியுள்ளனர். இவர்களின் இரண்டரை வயது மகள் நகிலா பானுவுடன் தங்கியிருந்த நிலையில் இன்று காலை அந்த குழந்தையைக் காணவில்லை.
இதனால் பதறிப்போன பெற்றோர் அந்த பகுதியில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கூடங்குளம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது இரண்டு மர்ம நபர்கள் குழந்தையைக் கடத்தி செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் தற்பொழுது மீட்கப்பட்டுள்ளது. ஆனால் கடத்தியவர்கள் யார் என்று தெரியாத நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.