சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் இறைச்சிக் கடையின் குடோனில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று (02.09.2024) அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன ஆயிரக்கணக்கான ஆட்டுக்கால்களைப் பதப்படுத்தி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை விற்பனை செய்த இறைச்சிக் கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 700 கிலோ ஆட்டுக்கால்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்து அழிக்கப்பட்டன. கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடம் லாரிபேட்டை, செல்வபுரம் சில்லறை மீன் விற்பனை கடைகள் உள்ளிட்ட 51 மீன் மார்கெட் மற்றும் மீன் விற்பனை கடைகளில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சித்துறை அதிகாரிகள் அடங்கிய 12 பேர் கொண்ட 6 குழுவினர் இன்று (03.09.2024) அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
இதில் 9 கடைகளில் அதாவது 5 மொத்த மீன் விற்பனை கடைகளில் இருந்து 65 கிலோ கெட்டுப்போன மீன்களும், சில்லறை விற்பனை கடைகளில் 38 கிலோ என என சுமார் 103.5 கிலோ அளவு கொண்ட கெட்டுப்போன மீன்கள் கண்டறியப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 50 ஆயிரத்து 150 ரூபாய் ஆகும். இதனையடுத்து கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்ட உள்ளன. மேலும் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தவர்களுக்கு அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் இந்த 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.