காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான தகவல் வெளியான நாளிலிருந்தே சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் எனவும், தங்களை வாழ்விடங்களில் இருந்து அகற்றக் கூடாது எனவும் கோரிக்கை வைத்து சுமார் 400 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 433 வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். என்றுமே, மக்கள் பகல் வேளைகளில் தங்களது பணிகளை முடித்துக் கொண்டு இரவு வேளைகளில் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இன்று மச்சநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி குழு அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதாக வெளியான தகவலையடுத்து பகலிலேயே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்தும், படுத்தும் தங்களது கடும் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுற்றியுள்ள அனைத்து சோதனை சாவடிகளும் போலீசார் கட்டுப்பாட்டில் இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 கிராமங்களை தவிர்த்து வெளியாட்கள் யாரும் உள்ளே போகாத முடியாத சூழ்நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.