கஜா புயல்.. கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களை நிலைகுலைய செய்தது. விடியும் போது விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் காணாமல் போய் இருந்தது.
விளைநிலங்களில் ஓங்கி உயர்ந்து நின்ற மரங்களை தரையில் கிடந்தது. வீட்டில் இருந்த உடமைகளும் இல்லாமல் தவித்தனர். மக்களுக்கு உடனடியாக உள்ளூர் இளைஞர்களும், அடுத்தடுத்த நாட்களில் தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டினார்கள். ஒரு வேலை சோற்றுக்காக தட்டேந்தி நின்ற குழந்தைகளை காணும் போது கண்ணீர் வந்தது.
அடுத்தடுத்த நாட்களில் தன்னார்வலர்கள் கிராமங்களுக்குள் சென்று நிவாரணம் கொடுத்தனர். அரிசி, தண்ணீர், உடை கொடுத்தனர். உடனடியாக இவற்றை செய்ய வேண்டிய அரசாங்கம் ஒரு வாரத்திற்கு பிறகு தான் பார்வையிடவே வந்தது. அதன் பிறகு அரிசி கொடுத்தார்கள். ஒரு மாதம் கழிந்த பிறகு நிவாரணப் பெட்டி கொடுத்தார்கள். அதிலும் பாதிப் பேருக்கு இல்லை. இதனால் பல பிரச்சனைகள் வந்தது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில உள்ள அரசர்குளம் கீழ்பாதியில் உள்ள கிராம சேவை மையத்தில் அரிசி உள்ளிட்ட அரசு நிவாரணப் பொருட்களை இருப்பு வைத்து கிராம மக்களுக்கு கொடுப்பதாக சொன்னார்கள். அந்த ஊரிலும் பலருக்கு கிடைக்கவில்லை. கேட்ட போது எல்லாம் முடிந்துவிட்டது. வரும் போது தருகிறோம் என்று அதிகாரிகள் சொல்லி மக்களை திருப்பி அனுப்பினார்கள்.
இந்த நிலையில் தான் இன்று (28.11.2019) வியாழக்கிழமை அரசர்குளம் கிராம சேவை மையத்திற்கு பின்பக்கம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மண் மேடு கட்டிய இடம் மழை தண்ணீரில் கரைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. கிராம இளைஞர்கள் சென்று பார்த்த போது அதிர்ந்தனர். காரணம் அங்கே புதைக்கப்பட்டிருந்தது 30- க்கும் மேற்பட்ட நிவாரண அரிசி மூட்டைகள். அன்று கேட்கும் போது இல்லை என்று சொன்னார்கள். இப்ப அந்த அரிசி மூட்டைகளை கெட வைத்து யாருக்கும் தெரியாமல் இடத்தில் புதைத்து வைத்திருக்கிறார்கள். மழை பெய்ததால் மண் கரைந்து அரிசி துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது என்ற இளைஞர்கள். இப்படி உணவுப் பொருளை பதுக்கி வைத்து கெட்ட பிறகு மண்ணுக்குள் புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
புதைத்து வைத்த அரிசி மூட்டைகளை இளைஞர்கள் வெளிக் கொண்டு வந்துவிட்டார்கள் என்ற தகவல் அறிந்து அதிகாரிகள் இளைஞர்களை சமாதானம் செய்ய புறப்பட்டுள்ளனர். அதற்குள் யாரும் படம் எடுக்க வேண்டாம், வீடியோ எடுக்க வேண்டாம் என்று தடுக்கவும் சிலர் தயாராகவே உள்ளனர்.
இதே போல நாகுடி கிராம சேவை மையத்திலும் புயல் நிவாரணப் பொருட்கள் ஒரு வருடமாக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். நாகுடி கிராம சேவை மையத்தை மக்களோடு சென்று திறந்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும். இல்லை என்றால் இரவோடு இரவாக அதையும் மாற்றி செல்ல வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். புயல் அடிச்சு ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால் அதற்கு வந்த அரிசியை இப்படி மக்களை ஏமாற்றி மண்ணில் புதைத்து வைத்திருப்பது வேதனையானது. அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்களோ.