டாஸ்மாக் கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரி 3 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயுடன் பிடிபட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவண்ணாமலை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை கண்காணித்து கண்டுபிடிக்கும் பறக்கும்படை அதிகாரியாக சேலத்தில் பணியாற்றுபவர் குழந்தைவேலு. இவர் வியாழக்கிழமை இரவு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் சென்று மாமுல் வசூல் செய்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது, விற்பனை மதுவிற்கு பில் போடாமல் இருப்பது, டாஸ்மாக் கடை மூடப்பட்ட பின்னரும், பக்கத்தில் உள்ள கடைகளில் வைத்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டிய அதிகாரி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால், மாதம் ஒரு கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு நெருக்கடி தந்து லஞ்சம் வாங்குவது இவரது பாணியாம்.
அதன்படியே வியாழக்கிழமை வேலூர் மாவட்டத்தில் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார். இந்த வசூலால் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள், வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் குழந்தைவேலுவை கண்காணித்து பின்தொடர்ந்தனர்.
இரவு 8.30 மணி அளவில் ஆம்பூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்து கொண்டு காரில் புறப்பட்டவரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கினர். அப்போது காரை சோதனையிட்டனர். சோதனையில் அவரிடம் 3 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக இருந்ததை கைப்பற்றினர்.
இதற்கு கணக்கு கேட்டபோது, அவர் முறையான பதில் கூறவில்லை. உடனே வேலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி முடித்து அவரை கைது செய்து, இன்று காலை வேலூர் ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.