ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் வேலூர் வழியாக இளைஞர் ஒருவர் கஞ்சா கடத்தி செல்வதாக வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் இளைஞர் ஒருவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒடிசாவைச் சேர்ந்த ஜெயகவுடா என்பதும், 6 கிலோ கஞ்சாவைக் கடத்திச் செல்ல முயன்றதும் தெரிந்தது. அதன் பின்னர் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் ஜெயகவுடாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கேரளாவில் ஜெயகவுடா வேலை செய்து வருவதும், ஒடிசாவில் இருந்து தொடர்ச்சியாக ரயில் மூலம் கஞ்சா கடத்துவதும் தெரிந்தது. மேலும் போலீசில் சிக்காமல் இருக்க வேலூர் மாவட்டம் காட்பாடி ஜங்ஷனில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் வந்து, பின்னர் மீண்டும் ரயிலில் ஏறிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வெளி மாநிலத்தவர்கள் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கடத்தும் போது போலீசில் சிக்காமல் இருக்க, காட்பாடி ஜங்ஷனில் இறங்கி, வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து வேறொரு ரயில் மூலம் செல்லும் நிகழ்வு போலீசார் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.