கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினார்கள்.
அந்தக் கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், ''நான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் கொடநாடு பங்களாவில் நிகழ்த்தப்பட்ட கொள்ளையையும், கொலையையும் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவேன் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அந்த உறுதிமொழியை சொல்லித்தான் அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்றைக்கு 30 மாதங்கள் ஆகிவிட்டன. முப்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த வழக்கு இன்னும் ஆமை வேகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. முப்பது மாதங்கள் ஆன பின், இந்த வழக்கை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒரு போர்வையை இன்றைக்கு போர்த்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் மடியிலே கணம் இல்லாதவர்கள், நெஞ்சிலே ஈரம் உள்ளவர்கள். ஜெயலலிதாவின் மையப் புள்ளியில் இணைந்திருப்பவர்கள் எல்லாம் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிணைந்துவிட்டோம். இந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் உண்மையான தொண்டர் படை. ஆனால், அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் குண்டர் படை. எங்களுக்கு பொழுது போகவில்லை அதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகிறோம் என்று ஒருவர் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், அச்சாணி இல்லாத வண்டி என்று அ.ம.மு.க வை சொல்கிறார். எங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் வீட்டில் இருப்போம். ஆனால், அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்தில் சிந்து பாடி சிந்துபாத் வேலையை பார்ப்பார்கள்'' என்றார்.
இந்த போராட்டத்தின் தொடக்கத்தில் அங்கு வந்த ஓ. ராஜா, ஓ. பன்னீர்செல்வத்தின் முன்னிலையிலேயே டி.டி.வி தினகரனுக்கு சால்வை அணிவித்ததோடு சடாரென்று எதிர்பாராத விதமாக டி.டி.வி. தினகரனின் காலில் விழுந்தார்.