பேரறிஞர் அண்ணாவின் 53- வது நினைவு நாளையொட்டி, சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினர். அதேபோல், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தேர்தலின் போது தி.மு.க. பொய் வாக்குறுதி அளித்து தமிழ்நாட்டு மக்களை நம்பிக்கை மோசடி செய்து விட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை மறைக்க தி.மு.க. மக்களைத் திசை திருப்புகிறது. 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து சமூக நீதியை நிலை நிறுத்தியது அ.தி.மு.க. ஆட்சி தான்.
தேர்தல் வந்தவுடன் சமூக நீதி, தமிழின பிரச்னையை தி.மு.க. கையிலெடுக்கிறது. தமிழன் தமிழன் என்று சொன்னால் ராகுல் காந்தி தமிழன் ஆகிவிடுவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்காக குரல் கொடுத்த ராகுல் காந்தி எம்.பி. தான் தமிழன் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.