வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி திங்கள்கிழமையன்று புதுக்கோட்டையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன்கூடிய சட்டப்பூர்வமான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தப் பணிக்கொடையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். 21 மாதகால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களை முதலமைச்சரின் இலவச மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் இணைக்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் திங்கள் கிழமையன்று மாநில அளவில் கண்களில் கருப்புத்துணி கட்டி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமை வகித்தார். துரை.அரங்கசாமி, கு.ராஜமாணிக்கம், வி.செல்லத்துரை, ஆர்.தங்கராசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பெ.அன்பு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலளர் ஆர்.ரெங்கசாமி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பால்பிரான்சிஸ் உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் கு.சத்தி உரையாற்றினார். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.மலர்விழி வரவேற்க, மாவட்டப் பொருளாளர் வி.அன்னபூரணம் நன்றி கூறினார்.