ஜனவரி 30, மு.க.அழகிரி பிறந்த நாள். தென் மாவட்டங்களில் அவரது விசுவாசிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டாலும், மதுரையில் மு.க.அழகிரியை வாழ்த்தும் பிறந்தநாள் போஸ்டர்களுக்குப் பஞ்சமில்லை. எங்கும் காண முடிகிறது.
வாழ்த்து போஸ்டர் என்றாலும், அவரது ஆதரவாளர்கள், தங்களின் விசுவாசம், நம்பிக்கை, ஆதங்கம், வருத்தம் என அனைத்தையும் ஏதோ ஒருவகையில் வெளிப்படுத்தி விடுகின்றனர். போஸ்டர் வாசகம் குறித்து கேட்டால், பக்கம் பக்கமாக அவர்களால் வசனம் பேசமுடிகிறது. அவர்களின் கருத்துக்களைச் சுருக்கமாக இங்கே தொகுத்துள்ளோம்.
‘கழகத்தைக் காக்க வா! தமிழகத்தை மீட்க வா! தலைவா!’ என்று வாழ்த்தினால் என்ன அர்த்தம்? “தற்போது பாதுகாப்பற்ற நிலையில் கழகம் உள்ளது. ஒரு தலைவனாக இருந்து தமிழகத்தை மீட்க அண்ணனால்தான் முடியும்.”
‘எதையும் தாங்கும் இதயம் – அறிஞர் அண்ணா. இதையும் தாங்கும் இமயம் நீயே அண்ணா!’ என்றால், “அண்ணா என்றால் அறிஞர் அண்ணாவைத்தான் குறிக்கும். அவருக்குப் பிறகு, ‘அ’னா என்றாலோ, அண்ணன் என்றாலோ, அது மு.க.அழகிரியின் அடையாளம் ஆனது. இதையும் தாங்கும் இமயம் என்பதற்கெல்லாம் அர்த்தம் சொல்லத்தான் வேண்டுமா? அவர் யாரால் எந்த அளவுக்கு நோகடிக்கப்பட்டார் என்பது யாருக்குத்தான் தெரியாது. ஆனாலும், அமைதி காத்து வருகிறாரே!”
‘அஞ்சா நெஞ்சரே! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்.. உன்தன்னோடு உற்றோமே யாவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!’ “திருப்பாவை வரிகள் இவை! ஏழேழு பிறவி எடுத்தாலும், அண்ணன் ஒருவருக்கே நாங்கள் தொண்டர்களாக இருந்து தொண்டூழியம் செய்வோம் என்பதாகும்.”
‘நிஜம் வெல்லும்!’ “இதற்கும் அர்த்தம் சொல்ல வேண்டுமா? அண்ணன் மட்டும்தான் நிஜம்! வேறு யாராக இருந்தாலும், நிழல்தான்!”
‘ராசியானவரே! மாற்றம் 2021-ல் மறுபடியும் மாறும்..’ என்றால், “தென் மண்டல அமைப்புச் செயலாளராக அழகிரியண்ணன் இருந்த வரையிலும் திமுகவுக்கு வெற்றி முகம்தான்! என்றைக்கு அவர் புறக்கணிக்கப்பட்டாரோ, அன்றிலிருந்து இறங்கு முகம்தான்! கழகத்தில் ராசியானவர் என்றால் மு.க.அழகிரி ஒருவர்தான் என்பது கலைஞருக்கே தெரியும். 2021-ல் தற்போதைய நிலை நிச்சயம் மாறும்.”
‘என்றும் கழகத்திற்கு எல்லாமே எங்க அண்ணன்தான்!’ – “எங்களைப் பொறுத்த மட்டிலும், கழகமும் அவரே! உறவும் அவரே! அண்ணன்தான் எங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறார்.”
‘மலர் பாதையா? முள் படுக்கையா? எதுவாகினும் அண்ணன் வழியில்.. இந்த வழி ஒன்றுதான் என் வழி என்று நாம்!’ – “கட்சியில் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. அது மலர் பாதை. இன்றோ, அங்கீகாரம் எதுவும் இல்லாமல் விலகி நின்று அரசியலை வேடிக்கை பார்க்க வேண்டியதிருக்கிறது. இது முள் படுக்கையைக் காட்டிலும் கொடுமையானது. அண்ணன் மீது கொண்ட பாசத்தினால், எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நாட்களை நகர்த்தி வருகிறோம்.”
‘தலைமையேற்கும் எங்கள் தலைமையே!’, ‘எது வந்தாகினும் எமக்கு நீயே!’, ‘தமிழின தலைவரின் தடம் மாறா தலைமகனே!’ என்றெல்லாம் அண்ணனைப் புகழ்வதற்குக் காரணம் – “எந்தச் சூழ்நிலையிலும் கட்சியை விட்டுக்கொடுக்காமல், எந்தப் பக்கமும் தாவாமல், ஒரே தடத்தில் அவர் பயணிப்பதுதான்!”
அடேங்கப்பா, கோனார் தமிழ் உரை ரேஞ்சுக்கு அல்லவா மு.க.அழகிரி விசுவாசிகள், வாழ்த்து வாசகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.