தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு திருப்பழனம் மேலதெருவை சேர்ந்தவர் எடிசன். இவருடைய மனைவி நித்யா(28). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நித்யா கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி கிழக்குகாடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமாருடன்(28) வசித்து வந்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோடு அரசு மருத்துவமனையில் நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை நித்யா, சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் ரூ.4.50 லட்சத்துக்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேங்காமண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜெயசந்திரன் (46) - அகிலாராணி (39) தம்பதிக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதி விற்பனை செய்தனர்.
பின்பு மனமாறிய நித்யா, ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நித்யா - சந்தோஷ்குமாரிடம் இருந்து குழந்தையை வாங்கிய தம்பதி ஜெயச்சந்திரன் - அகிலாராணி, இதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட செல்வி(47), ராதா (39), ரேவதி (35), சித்திக்கா பானு (39), ஜெயபாலன் (42) ஆகிய 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் குழந்தை வாங்குவதற்கு உதவியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சர்கோடு பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரனின் உறவினரான ஜெபகிருபாகரன்(48), ஏற்கனவே கைதான ரேவதியின் கணவர் கணேசன் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இந்தநிலையில் ஜெபகிருபாகரனை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கணேசனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, குழந்தை விற்பனை விவகாரத்தில் மிகப்பெரிய நெட்வொர்க் வேலை செய்துள்ளது. இதுவரை இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணேசன் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கைதானவர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளோம். இந்த கும்பல் இதே போன்று வேறு ஏதாவது குழந்தைகளை விற்பனை செய்து உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தலைமறைவானவரை பிடித்தால் தான் முழுமையான தகவலை பெற முடியும் என்றனர்.