பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் எரிபொருளின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்துவருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்தவகையில், இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் விழுப்புரம் தொகுதி செயலாளர் முனுசாமி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஒன்றிய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் எரிவாயு போன்றவற்றில் வரலாறு காணாத விலை ஏற்றத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த விலை ஏற்றம் காரணமாக சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வு, பஸ், ரயில் கட்டணங்களில் உயர்வு என சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களை நசுக்குகிறது. அதேபோல். விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது" என்று கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை ஏற்றத்தைக் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். ‘ஒன்றிய அரசே விலை ஏற்றத்தை குறைத்திடு..’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய மற்றும் தமிழக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.