புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி கூடியது. அன்றைய தினம் அரசின் மூன்று மாத செலவீனங்களுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2018 - 19 நிதி ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், அது தொடர்பான விவாதங்கள் மற்றும் மசோதாக்கல் நிறைவேற்றுவதற்காக இன்று மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. அதன்படி காலை10 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் வைத்திலிங்கம் திருக்குறள் வாசித்து துவங்கி வைத்தார். பேரவையில் முதல் நிகழ்வாக மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியநாயகசாமி, மறைந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விபி.முனுசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை எனக்கூறியும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதேபோல் ஆளும் அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை எதையும் நிறைவேற்றவில்லை எனக்கூறியும், மாநிலத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறியும் பேரவையில் இருந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம் திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். இன்றைய பேரவை கூட்டம் முடிந்தவுடன் அலுவல் ஆய்வுக் குழு கூடி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. வருகின்ற 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதேசமயம் முன்னதாக தங்களையும் கூட்டத்தொடரில் அனுமதிக்க வலியுறுத்தி பா.ஜ.கவை சேர்ந்த நியமன எம்.எல்ஏக்களும், அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க தொண்டர்களும் பேரணியாக சட்டசபை நோக்கி சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கைது செய்தனர்.