நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி சிந்தலவாடம்பட்டி ஊராட்சி, ராமபட்டினம், புதூரில் அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான முஹம்மது முபாரக்கை ஆதரித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், 'ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கழகம் என்ன ஆகுமோ என்ற நிலை இருந்தது. ஆனால் ஏகோபித்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அன்பினால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்ற துரோகிகளை வென்று கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார் ஜெயலலிதா இருந்தபோது கூட சட்டசபையில் 67 சட்டமன்ற உறுப்பினர்களைத்தான் பெற முடிந்தது. எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 75 சட்டமன்ற உறுப்பினர்களை கழகம் பெற்றது. திமுக தேர்தலுக்கு முன்பாக 520 வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. பாலும் தேனும் ஆறாக ஓடும் எனக் கூறி தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதே போன்றுதான் தற்போதும் திமுகவின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் சாத்தியம் இல்லாத நிறைவேற்ற முடியாத திட்டங்களை வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை. கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், தாய் சேய் பெட்டகம்,அம்மா கிளினிக்குகள், மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள் போன்ற எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதோடு அரிசி, பால், பருப்பு விலை கடுமையாக உயர்ந்து விட்டது. சொத்து வரியை உயர்த்தி விட்டது. மின் கட்டணம் பன்மடங்காக உயர்த்தி விட்டது. மாநில அரசுதான் இந்த கொடுமை என்றால் மத்திய அரசு அதைக் காட்டிலும் கொடுமையாக உள்ளது. இனி சாமானியமான மக்களால் தங்கம் வாங்க முடியாது. தங்களது பிள்ளைகளுக்கு தங்கப்பன் தங்கம்மாள், தங்கம் என பெயர்தான் வைக்க முடியும். எனவே, இந்த மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்கு அச்சாரமாக வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு அமோக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.