வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறைகளை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். விடுமுறையின் தொடக்கத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டண வசூல் செய்ததாகக் கூறி 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்கக் கோரி தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
விடுமுறை முடிந்து ஊர் திரும்பப் பயணிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் எனத் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் மாறன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “எங்கள் சங்கத்தில் 1,500 பேருந்துகள் உள்ளன; அவை அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். எங்கள் சங்கத்தில் தான் அதிக பேருந்துகள் இருக்கிறது. பொதுமக்கள் பயப்பட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார். இரு சங்கங்களும் வெவ்வேறு அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இதனையடுத்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தென் மாநில பேருந்துகள் கூட்டமைப்பு சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாகப் போக்குவரத்து இணை ஆணையர் முத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆம்னி பேருந்து வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் பேச்சுவார்த்தையில் தவறுதலாக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை நாளைக்குள் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், முறையாக வரி கட்டிய வாகனங்களை விடுவிப்பதாக அரசு தரப்பு உறுதியளித்துள்ளது. இதையடுத்து நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்டு வாகனங்களை சிறைபிடிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு தரப்பு ஏற்றுக் கொண்டதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தென் மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்குச் செல்ல அதிகாரப்பூர்வ கட்டண விபரத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1610 முதல் அதிகபட்ச கட்டணமாக ரூ.2430 வரை வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னையிலிருந்து மதுரை செல்ல ரூ.1930 முதல் ரூ.3070 வரையிலும், சென்னையிலிருந்து கோவை செல்ல ரூ.2050 முதல் ரூ.3310 வரையிலும், சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல ரூ.2320 முதல் ரூ.3810 வரையிலும் வசூலிக்கப்பட வேண்டும்.
மேலும், நெல்லை செல்ல ரூ.2380 முதல் ரூ.3920 வரையிலும், சேலம் மற்றும் தஞ்சாவூர் செல்ல ரூ.1650 முதல் ரூ.2500 வரை வசூலிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டண விகிதத்தை தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று சங்க உறுப்பினர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதனை மீறி செயல்படக்கூடிய ஆம்னி பேருந்துகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.