Skip to main content

பொள்ளச்சி விவகாரத்தில் துணை சபாநாயகரை தொடர்புபடுத்திய விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்க அறிவுறுத்தல்!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

highcourt ask udhaynithi stalin's advocate to advise udhayanithi stalin

 

ஆதாரம் இல்லாமல்,  பொதுவெளியில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனைத் தொடர்புபடுத்திப் பேசுவது ஏன் என, உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், உதயநிதிக்கு அறிவுரை வழங்குமாறு அவரது வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூரில் கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி பங்கேற்ற கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனையும், அவரது மகனையும் தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.
 


இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்திப் பேசி, தன்னுடைய புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்திய  உதயநிதியிடம் ஒரு கோடியே ஓராயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரியும், பொள்ளாச்சி விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்திப் பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரியும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், ஆதாரமின்றி இந்த விவகாரத்தில் துணை சபாநாயகரை தொடர்புபடுத்தி,  அவரது புகழுக்கு உதயநிதி  இழுக்கு ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார். 


இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இந்த விவகாரத்தில் துணை சபாநாயகரையோ, அவரது குடும்பத்தாரையோ குற்றம் சாட்டாத நிலையில், உதயநிதி ஸ்டாலின் ஏன் பொதுவெளியில் ஆதாரமின்றி அவதூறு கருத்துகளைப் பேசுகிறார் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும் வரை,  இத்தகைய கருத்துகளைத் தெரிவிக்க மாட்டேன் என உதயநிதி சார்பில் உத்தரவாதம் அளிக்க, அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டதோடு, அவருக்கு அறிவுரை வழங்குமாறு எடுத்துரைத்தார். 
 

தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்குவதாகவும், வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் வரை பொதுவெளியில் இதுபோன்ற கருத்துகளை உதயநிதி ஸ்டாலின் பேச மாட்டார் எனவும், அவரது வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்ததைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் உதயநிதி பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, விசாரணையை மார்ச் மாதம் 4 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்