சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வகுடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிலம் குறித்த பாக்கியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடாவூரில் நிலம் எடுப்பு அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.