Skip to main content

“இது ஒன்றும் அச்சுறுத்தலுக்கானது இல்லை” - திமுக எம்.பி. கனிமொழி

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

nn

 

நேற்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பி இருந்தார். அப்பொழுது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின், “பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதை அனைத்து கட்சிகளும் ஒற்றை இலக்காகக் கொண்டுள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாநிலத்தில் எந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளதோ அந்த கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும். தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்காது. இப்பொழுதுதான் எதிர்க்கட்சிகள் கூட்டணி கருவாகி இருக்கிறது. அது உருவாக இன்னும் சில மாதங்கள் ஆகும்” எனத் தெரிவித்தார்.

 

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நேற்று பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் நமது தமிழக முதல்வரும் கலந்து கொண்டார். மிக முக்கியமான ஒரு கூட்டம். ஒரே இடத்தில் ஒத்த கருத்தோடு வரக்கூடிய தேர்தலில் நாம் ஒருமித்தமாக சந்திக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் எல்லோரும் அணி திரண்டு நடத்திய அந்தக் கூட்டம் என்பது மிக முக்கியமான கூட்டம்.

 

இன்று நாட்டில் மிகப்பெரிய நம்பிக்கை தந்திருக்கிற கூட்டமாக அந்த கூட்டத்தை நாம் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு என்பது யாரையும் அச்சுறுத்துவதற்காகவும், பயமுறுத்துதற்காகவும் இல்லை. நிச்சயமாக மக்களுக்கு நம்பிக்கை தருகின்ற கூட்டம். இந்த நாட்டை எல்லோரும் இந்தியா என்று நினைத்து பார்க்கும் பொழுது நமக்கு எல்லோருக்குமான நாடாக இது இருக்க வேண்டும். எல்லாருக்குமான தேசமாக இருக்க வேண்டும். யாரையும் அச்சுறுத்தும் தேசமாக இந்த நாடு இருக்க வேண்டாம் என்பதுதான் நாம் அனைவரும் நினைக்கக் கூடிய, எதிர்பார்க்கக் கூடிய ஒன்று” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்