திருவண்ணாமலை அடுத்த துர்கை நம்மியந்தல் கிராமத்தில் அரசின் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயில்கிறான் 8 வயதான ஜெயப்பிரகாஷ். இவனது அப்பா மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார். தாயார் பரிமளா. கடந்த ஜீலை 16ந்தேதி பள்ளிக்கு சென்ற ஜெயப்பிரகாஷ்சிடம், ஆசிரியர் உஷா, கூட்டல் கணக்கு சரியாகபோடவில்லையென வகுப்பில் ஜெயப்பிரகாஷ்சை அடி பிச்சி எடுத்துள்ளார்.
பிரம்பால் அடித்ததில் அந்த 8 வயது மாணவனின் உடலெல்லலம் ரத்தம் கட்டிக்கொண்டு வீங்கிப்போய்வுள்ளது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் இருந்து ஐஸ்கட்டி வாங்கி வந்து ஒத்தடம் தந்து வகுப்பறையில் படுக்கவைத்தவர், மாலை பள்ளி முடிந்தபோது, இதைப்போய் வீட்டில் சொன்ன நாளைக்கும் அடிப்பன் எனச்சொல்லி அனுப்பியுள்ளார். அடிவாங்கிய அந்த பையன் வீட்டில் எதுவும் சொல்லாமல், விளையாட செல்லாமல் வந்து படுத்துக்கொண்டுள்ளான்.
அதன்பின் நடந்தவற்றை ஜெயப்பிரகாஷ்சின் அம்மா பரிமளா நம்மிடம் கூறும்போது, அந்த ஸ்கூல்ல படிக்கற இன்னொரு பையன் எங்கிட்ட வந்து சொன்னான். வீட்ல வந்து பார்த்தப்ப படுத்துக்கிட்டுயிருந்தான், அவன் சட்டையை கழட்டி பார்த்தப்ப ரத்தம் கட்டிக்கிட்டு அடிச்சி வடுயிருந்தது எனச்சொல்லி கண் கலங்கியவர், உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிம்போய் காட்டனன், ஊசிப்போட்டு மருந்து தந்தவங்க, பெட்ல சேர்க்கச்சொன்னாங்க. அதுக்குள்ள ஊர் தலைவர் ( முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ) கிருஷ்ணராஜ் உட்பட இன்னும் சிலர் வந்து பேசிக்கலாம்ன்னு சொல்லி அழைச்சிக்கிட்டு வந்துட்டாங்க. இரண்டு நாளா அழைச்சிட்டு போய் ஊசி போட்டுக்கிட்டு வந்தன்.
ஜீலை 16ந்தேதி ஊர்க்காரங்க பத்துப்பேர் ஸ்கூல்க்கு என்னை அழைச்சிட்டு போனாங்க. அந்த டீச்சரம்மா, கணக்கு போடல அதனால் வேப்பமரத்தில் இருந்து பச்சை குச்சியை உடைச்சி எடுத்துவந்து அடிச்சன்னு சொன்னாங்க. பச்சை குச்சியால அடிச்சா எப்படியிருக்கும்ன்னு நீங்களே நினைச்சிப்பாருங்க என்றவர், அந்தம்மா, அடிச்சன் அதுக்கு என்ன பண்ண சொல்றிங்க, எனக்கு கலெக்டர் ஆபிஸ்ல, கட்சியில ஆளுங்கயிருக்காங்க. என்னை ஒன்னும் பண்ண முடியாதுன்னு அங்க சொன்னாங்க. ஒரு மன்னிப்பு கேளுங்க, அந்தம்மா புகார் தரமாட்டாங்கன்னு சொன்னாங்க. ரொம்ப நேரம் ஒரு மன்னிப்பு கேட்கலைங்க. அதுக்கப்பறம் ஸாரின்னு சொல்லிட்டு ஸ்கூல் உள்ள போய்ட்டாங்க.
பிறகு அந்த டீச்சர், 1000 ரூபாய் ஊசி போடன்னு ஆள் மூலமா குடுத்து அனுப்பனாங்க. நல்லா அடிச்சிடுவாங்க, பிறகு ஆஸ்பத்திரி செலவுக்குன்னு பணம் தந்தா வாங்கிக்கிட்டு கம்முனு போய்டனும்னு நினைச்சியிருக்காங்க. ஒன்னுக்கிட்ட ஒன்னாகியிருந்தாலும் இப்படித்தான் பணம் தந்து சரிப்பண்ணுவாங்களா என கோபமாக கேட்டவர். அந்தம்மா என்பையனை மட்டும் இப்படி அடிக்கல.
இதுக்கு முன்னாடி 5வது படிக்கற தீபம்நகர் பையனை அடிச்சி ஒரு வாரம் ஸ்கூல் போகல. போன வருஷம் 2 வது படிச்ச இதே ஊர் பையனை கை மேலயே அடிச்சி, ஒன்னரை மாசம் ஸ்கூல் போகல. அந்தம்மா 14 வருஷமா இங்கயே டீச்சரா வேலை பார்க்கறாங்க. பக்கத்தலயிருக்கற சீலப்பந்தல் ங்கற கிராமத்தை சேர்ந்தவங்க. அதனால் தலைவருங்க, கவுன்சிலருங்க ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்தை பார்த்துக்கனும்மேன்னு எத்தனை முறை அடிச்சி பிரச்சனையானாலும் சமாதானம் செய்து அனுப்பிடறாங்க என்றவர்.
இன்னைக்கு பையன் உடம்புல அடிச்சயிடத்தல ரத்தம் கட்டியது லேசாயிருக்கு. இருந்தும் பையனை கூப்ட்டும் போய் விட்டன். என்னை வேற எங்கயாவது சேர்த்துவிடு, இதே ஸ்கூல்ன்னா போகமாட்டன்னு அழுதான். நாங்கயென்ன பணக்காரங்களா உடனே வேற ஸ்கூல் மாத்த. நாம தான் படிக்கல, புள்ளைங்களாவது படிக்கட்டும்ன்னு தான் அவ கத்தி அழ, அழ மனச தேத்திக்கிட்டு ஸ்கூல்ல விட்டன், பின்னாடியே ஓடிவந்தான். ஹெட்மாஸ்டரம்மா தான், அந்த டீச்சர் வரல, வான்னு அழைச்சிம் போனாங்க என்றார்.
அந்த பையனின் பாட்டி மற்றும் உறவினர்கள், ஒரு குழந்தைங்களை இப்படி அடிக்கற டீச்சரை இதுவரை நாங்க எங்க வயசுக்கும் பார்த்ததில்லை என்றார்கள்.
நாம் அந்த பள்ளிக்கு சென்றபோது, தலைமைஆசிரியர் அறையில் யாரும்மில்லை. அந்த டீச்சர் வரல என்றார்கள். இதுப்பற்றி முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, அதுப்பற்றி தகவல் வந்தது, இதுப்பற்றி மாவட்ட கல்வி அலுவலரை விசாரிச்சி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கசொல்லியுள்ளது என்றார்.
பள்ளி எப்படியிருக்க வேண்டும், ஆசிரியர்கள் மாணவ – மாணவிகளிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியராக ஜோதிகா நடித்த ராட்சசி என்கிற படம் வெளிவந்து பலதரப்பின் பாரட்டை பெற்றுள்ளது. அதில் ஜோதிகா ஏற்றுள்ள கதாபாத்திரம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் கதாபாத்திரம் தான். மாணவர்கள் மீது அக்கறையும், நலனும் கொண்டுள்ள பல ஆசிரியர்கள் உள்ள மாவட்டத்தில் குழந்தைகளிடம் வன்முறையை காட்டும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் வேதனைப்பட வேண்டும்.