Skip to main content

குரூப்-1 தேர்வில் மட்டுமல்ல… குரூப்- 2 தேர்விலும் குளறுபடி- வெடிக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

துணைகலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்- 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவைதான் என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு பொது தேர்வாணையாமான டி.என்.பி.எஸ்.சி. ஒப்புக்கொண்டது  தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இதுகுறித்து, நாம் விசாரித்தால் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் மட்டுமல்ல குரூப்-2 தேர்விலும் இதேமுறைகேடுகள் குளறுபடிகள் நடந்துள்ளன என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் தனியார் பயிற்சிமைய ஆசிரியர்களும் மாணவர்களும்.

 

TNPSC



துணை கலெக்டர்,  போலீஸ் டி.எஸ்.பி.,  ஊராட்சி  உதவி இயக்குனர், வணிகவரி  உதவி  கமிஷனர்,  மாவட்டப்  பதிவாளர்,  கூட்டுறவு சங்கங்களின்  துணைப் பதிவாளர்,  மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய  உயர்  பதவிகள்  குரூப்–1  முதல்நிலைத்தேர்வு  கடந்த 2019 மார்ச் மாதம் நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 3 ந்தேதி ரிசல்ட் வந்தபோது, 18 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன என்று அப்போதே சர்ச்சை கிளம்பியது. ஆனாலும், தவறுகள் திருத்தப்பட்டதாகச்சொல்லிவிட்டு ஜூலை-12, 13 தேதிகளில் 9,000 மாணவர்களுக்கான முதன்மைத்தேர்வை (மெயின் தேர்வு) அறிவித்தார் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன்.

 



இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர் விக்னேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்டது நீதிமன்றம். ஆனால், மூன்றுமுறை விளக்கமளிக்காமல் வாய்தா வாங்கிக்கொண்டிருந்தது டி.என்.பி.எஸ்.சி. இதனால், மெயின் தேர்வை நிறுத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி. இதனால், கதறியடித்துக்கொண்டு ஓடிவந்த  டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள், 24 கேள்விகள் தவறானவை என்று ஒப்புக்கொண்டபோது அதிர்ச்சியடைந்து கண்டனம் தெரிவித்தார் நீதிபதி. காரணம், மாணவர் தரப்பில் 18 கேள்விகள் தவறானவை என்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கேட்கப்பட்ட 200 கேள்விகளில்  24 கேள்விகள் தவறானவை என்பதால் குரூப்-1 தேர்வில் இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்கவே முடியாது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஜூன் – 17 ந்தேதி பதில்மனு தாக்கல் செய்யச்சொல்லி உத்தரவிட்டார் நீதிபதி.

 

TNPSC



இதுகுறித்து, நம்மிடம் பேசிய பிரபல நட்ராஜ் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சிமைய இயக்குனர் நட்ராஜ், “குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் மட்டுமல்ல.. குரூப்-2 முதல்நிலைத்தேர்விலும் இதேபோன்ற குளறுபடிகள் நடந்திருப்பதை அப்போதே சுட்டிக்காட்டினோம். அதாவது, குரூப்-2 தேர்வில் 11 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருக்கிறது.  ஆனால், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டால்  தேர்வு எழுதிய சுமார் 2,000 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது, 24 கேள்வி என்றால் கிட்டத்தட்ட 50,000 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நேர்மையாக படித்து தேர்வு எழுதிய 50,000 மாணவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிட்டது டி.என்.பி.எஸ்.சி.  இதைவிடக்கொடுமை, கடந்த வருடம் குரூப்-1 தேர்வின்மூலம் தேர்ச்சிபெற்ற 31 டி.எஸ்.பி.க்களில்  23 பேர்  டி.எஸ்.பிக்கள் பார்வை பரிசோதனையில் ஃபெயில் ஆகியிருக்கிறார்கள். பார்வை பிரச்சனை இருக்கிறதா? இல்லையா என்பது டி.என்.பி.எஸ்.சி.க்கு முன்கூட்டியே நேர்முகத்தேர்வின்போதே தெரியாதா? டி.எஸ்.பி.க்களுக்கு முக்கியத்தேர்வே உடல்தகுதிதான். அதிலேயே, ஃபெயில் என்றால் இவர்கள் நடத்தும் தேர்வு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நாமே புரிந்துகொள்ளலாம்” என்று வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார்.

 

 



டி.என்.பி.எஸ்.சியில் குறிப்பாக குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்தியது. தற்போது, 24 வினாக்கள் தவறானவை என்று டி.என்.பி.எஸ்.சியே ஒப்புக்கொண்டது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்