தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் நேற்று (07.12.2019) அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (09.12.2019) முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக கட்சியின் நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, "உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்திவிட்டார். அதிமுக கூட்டணி ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெறும். எந்த மாவட்டத்தில் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஆட்சேபனை இருக்கிறது? இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தலை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என நாங்கள் தற்போது கேட்கிறோம். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயங்குகிறது, அஞ்சுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுவிட்டு மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின். தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் திட்டம். மக்களிடம் விஷமத்தனமான தகவலை பரப்பி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் ஸ்டாலின். மக்கள் வாக்களித்துதான் பிரதிநிதி தேர்வு செய்யப்படுகிறார், பிறகு ஏன் மக்களை சந்திக்க ஸ்டாலின் அஞ்சுகிறார். தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்டதாக 3 ஆண்டு காலமாக ஸ்டாலின் கூறிக்கொண்டு தான் இருக்கிறார்" இவ்வாறு முதல்வர் பேசினார்.