திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம், கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலைச்செல்வி சிலையழகன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் தளுகை ஊராட்சி ஒன்றிய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் முத்துக்குமார் பேசுகையில், “தளுகை ஊராட்சியில் கழிப்பறை கட்டுவதற்கு இடவசதி அற்றவர்களுக்கு, அரசு பொது இடங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டித் தரப்பட்டுள்ள 40 கழிப்பறைகள் எவ்வித பராமரிப்பும் இன்றி சீரழிந்துவருகிறது.
அதில் பஞ்சாயத்து நிர்வாகம் உட்பட அனைவரும் குப்பையைக் கொட்டி, குப்பைக்கிடங்காக மாற்றிவருகின்றனர். இவற்றை சீரமைத்து பயன்பாட்டில் கொண்டுவந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொது கிணறுகளுக்கு அருகிலும், நீர் நிலையிலும் குப்பைகள் கொட்டும் அவல நிலையை மாற்ற வேண்டும். மேலும் பிறப்பு - இறப்பு, வாரிசு சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் எளிதில் பெற, 2014ஆம் ஆண்டு தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ், சுமார் ரூ. 40 லட்சம் செலவில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டடம் இதுநாள்வரை மக்கள் பயன்பாட்டில் இல்லாததால், குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்டநாள் கோரிக்கையான, முருங்கப்பட்டியில் உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் பலமுறை கூட்டத்தில் எடுத்துக் கூறியும் இதுநாள்வரை நடவடிக்கை இல்லை” எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்குப் பதில் அளித்த ஆணையர் விரைவில் தங்களது குறைகளை சரி செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அத்தியப்பன் ஜெகநாதன், ராமச்சந்திரன், தனலட்சுமி, சந்திரா, மணிகண்டன், ராஜசேகரன், கண்ணதாசன், ரேணுகாதேவி M. சந்திரா, திட்ட மேலாளர் பால்ராஜ், ஒன்றிய மேற்பார்வையாளர் ராஜசேகர், ஒன்றிய பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்ட மன்றத்தில் வைக்கப்பட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய மேலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.