சமீப காலமாக வட மாநிலத்தவர்கள் வேலைவாய்ப்புகளுக்காக தமிழகம் நோக்கி வந்து ரயில் நிலையங்களில் குவிந்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. அதேபோல் அண்மையில் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அத்துமீறி நுழைந்து பயணித்த வடமாநிலத்தவர்களை ரயில்வே காவல்துறையினர் கண்டறிந்து எச்சரித்து கூட்டம் கூட்டமாக கீழே இறக்கிவிட்ட சம்பவமும் வைரலாகி இருந்தது.
இந்நிலையில், மேற்குவங்கத்திலிருந்து தமிழகத்திற்கு வேலைவாய்ப்புக்காக வந்த வடமாநிலத்தவர்கள் ரயில்நிலையத்தில் கூட்டம் கூட்டமாக குளிக்கும் வீடியோ காட்சிகள் மீண்டும் வைரலாகி வருகிறது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து புதுச்சேரிக்கு அரவிந்தோ சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் வடமாநிலத் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக தமிழகம் வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை விழுப்புரம் சந்திப்பு ரயில்நிலையத்தில் வந்திறங்கிய வடமாநிலத்தவர்கள் தங்களது உடைமைகளுடன் ரயில்நிலையத்தை விட்டு வெளியேறாமல் ரயில்நிலையத்தையே தங்குமிடமாக மாற்றிக் கொண்டனர். மேலும், தாங்கள் எடுத்து வந்திருந்த பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் ரயில்நிலையத்தில் ரயில் பெட்டிகளில் நீர் நிரப்புவதற்காக உள்ள குழாய்களில் தண்ணீரைப் பிடித்து அந்த இடத்திலேயே குற்றாலத்தில் குளிப்பது போல் குளிக்கத் தொடங்கினர். நடைமேடையிலேயே தங்களது உடைகளை உலர்த்த தொடங்கினர். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாக, இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.