ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த வாரச்சந்தைக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து அன்றாட தேவைக்கான காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம்.
இந்த வாரச்சந்தைக்கு அருகே உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெங்காயம், காய்கறிகள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். வாரச்சந்தை அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக வெங்காய விலை மிகப்பெரிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக காய்கறி கடைகளில் வெங்காய விற்பனை குறைந்தது.
இந்நிலையில் நேற்று (10.12.2019) நடைபெற்ற சத்தியமங்கலம் வாரச்சந்தையில் விவசாயிகள் பெருமளவு வெங்காயம் கொண்டு வந்தனர். கடைகளில் வெங்காயம் கிலோ ரூபாய் 60- க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு வரை ஒரு கிலோ 100 முதல் ரு.150 வரை விற்பனையான நிலையில் வெங்காயம், வாரச்சந்தையில் ரூபாய் 60-க்கு விற்பனையானதால் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வெங்காயத்தை வாங்கிச்சென்றனர்.
இந்நிலையில் அருகே உள்ள தினசரி மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ ரூபாய் 100 முதல் ரூபாய் 150 வரை விலை கூறியதால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. வாரச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூபாய் 60- க்கு விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் தினசரி மார்க்கெட்டிற்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் நேரடி விற்பனையில், வாங்கும் பொதுமக்களுக்கு விலை குறைவாக கொடுக்கப்பட்டது.