ஈரோடு பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறன் இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியும் ஈரோடு மாவட்ட ஆட்சியருமான கதிரவனிடம் வழங்கினார். முன்னதாக அ.தி.மு.க. தேர்தல் பணிமனையிலிருந்து சுமார் 7 வாகனங்களில் மாவட்ட அட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வேட்பாளர் மணிமாறன், முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மொடக்குறிச்சி சிவசுப்பிரமணியம் ஈரோடு கிழக்கு தென்னரசு, த.மா.க. விடியல் சேகர் மற்றும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. என கூட்டணி கட்சியினருடன் சுமார் 50 பேர் வந்தனர்.
இது தேர்தல் விதிமுறை மீறல் என போலீசார் அ.தி.மு.க.வினருக்கு ஞாபகப்படுத்தினார்கள். பிறகு ஒரு சிலர் மட்டுமே மனு தாக்கல் அறைக்கு வந்தனர். மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறன். தனக்கு மாற்று வேட்பாளராக தனது மனைவி பிரியா என்பவரை மனு தாக்கல் செய்ய வைத்தார். அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் ஏன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருக்கிறோமே மாற்று வேட்பாளராக நாங்கள் இல்லையா? எதற்கு உங்கள் மனைவியை தாக்கல் செய்ய வைத்தீர்கள்? என கேட்க, “நீங்களெல்லாம் இருக்கீங்க ஒரு வேளை எனது மனு தள்ளுபடியானால் என்ன செய்வது? அதற்கு தான் என் மனைவியை மாற்று வேட்பாளராக கொண்டு வந்தேன்' என கூறியிருக்கிறார்.