தென்மேற்கு பருவமழை வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்து, அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் இன்று (16.08.2024) ஆலோசனை நடத்தினர். சென்னை மாநகராட்சியின் அலுவலக கட்டடமான ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 8 துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அந்த வகையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், சென்னை தொகுதிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம், ரயில்வே துறை, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட சேவைத் துறைகளுடன் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது.