தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகாலமாக விவசாயப் பணிக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் பாசன ஆறு, வாய்க்கால், வடிகால் முதலான நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் வறட்சி, மழை, வெள்ளம், புயல் என மாறிமாறி இடர்பாடுகளைச் சந்தித்து அப்பகுதி விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகினர்.
இதுதவிர விவசாயப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையும், சம்பள உயர்வும் சாகுபடி பரப்பினை குறைத்துக் கொண்டே வருகிறது. இத்தகைய சூழலில் வடநாட்டுத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரன் என்கிற கிராமத்தில் வடநாட்டுக் கூலித் தொழிலாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் தாளடி நடவுப் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர். “நமது பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் செய்யும் வேலையை, வடமாநிலத் தொழிலாளர்கள் பாதி எண்ணிக்கையில் அதிக நேரம் எடுத்துச் செய்து முடிக்கின்றனர்” என்கிறார்கள் சில நிலத்தின் உரிமையாளர்கள்.