Skip to main content

வெளிமாநில தொழிலாளி கொலை! 

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

north indian youth passed away in work place

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ‘பு. மாம்பாக்கம்’ கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ்(50). இவர், புதிதாக தனது ஊரிலேயே ஒரு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது புது வீட்டுக்கு டைல்ஸ் உள்ளிட்ட இதர பணிகளை செய்வதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது பவுன்குமார், 30 வயது அமீத் என இரண்டு பேரை கடந்த 3ஆம் தேதி முதல் அவரது வீட்டில் வேலை செய்ய அழைத்து வந்துள்ளார். 


அவர்கள் அவரது வீட்டில் தொடர்ந்து வேலை செய்து வந்தனர். இருவரும் அதே வீட்டின் மேல் மாடியில் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி ஊருக்கு சென்று வருவதாக கூறி ரமேஷிடம் இருவரும் 2000 பணம் பெற்றுள்ளனர். அவர்கள் திரும்பி வேலைக்கு வரும் வரை வீட்டு வேலை நிறுத்தப்பட்டது. சில நாட்கள் கழித்து இதர கட்டுமான வேலைகளை செய்வதற்காக கொத்தனார், சித்தாள் சிலர் அங்கு வேலைக்கு சென்றுள்ளனர்.


அப்போது வீட்டின் முன் பகுதியில் பைப்லைன் போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் ரத்தக் கறை படிந்த துணிகள் கிடந்துள்ளன. மேலும், தோண்டிப் பார்த்தபோது அங்கு வேலை செய்து வந்த பவன்குமார் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

 

டி.எஸ்.பி மகேஷ், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன பவன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டைல்ஸ் பதிக்கும் வேலைக்கு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பவுன்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.


இதுகுறித்து உளுந்தூர்பேட்டையில் உள்ள பவன்குமார் உறவினர் சங்கேஷ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் படுகொலை செய்யப்பட்ட பவன்குமார் உடன் தங்கியிருந்த அமீத் தலைமறைவாக உள்ளதால் பவுன் குமாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள். அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை. அது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மக்கள் குடியிருக்கும் கிராம பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்