காரைக்குடியில் சாக்கடைக்கு அருகிலேயே வைத்து சுகாதாரமற்ற முறையில் உணவுகளைத் தயாரித்த கடைக்கு நோட்டீஸ் வழங்கிய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஃபிரிட்ஜில் வைத்த கெட்டுப்போன அசைவ உணவுகளைப் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடியில் வியாழக்கிழமை சந்தைப் பகுதி எதிரில் உள்ள படையப்பா எனும் அசைவ உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாகவும் கெட்டுப்போன உணவுகள் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென அந்த கடைக்குள் சோதனை நடத்தினர். சோதனையில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன சிக்கன், நண்டு கிரேவி, நறுக்கி வைக்கப்பட்ட காய்கறிகள், சாதம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அகற்றினர். திறந்தவெளியில் சாக்கடைக்கு அருகே சமையல் செய்யப்படுவது தெரிந்து அதைச் சரி செய்ய வேண்டுமென ஐந்து நாட்களுக்குள் கால அவகாசம் வழங்கி உணவகத்தை மூடி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.