
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கியதையடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார்.
இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதிமுக சார்பில் தென்னரசுவும், தேமுதிக சார்பாக ஆனந்தும், அமமுக சார்பாக சிவபிரசாத்தும் போட்டியிடுகின்றனர். மேலும் பல கட்சியினர், சுயேச்சைகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசி நாளாகும். அதன்பிறகு பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.