மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் குழு இன்று (16.07.2021) டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு மேற்கொண்டனர்.
சந்திப்புக்குப் பிறகு அனைத்துக் கட்சி குழு உறுப்பினர்களுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''மேகதாது அணை கட்ட டிபிஆர் தயாரிப்பதற்கு இங்கு இருக்கக் கூடிய சென்ட்ரல் வாட் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி பேசினோம். அதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ‘மேகதாது கட்ட முடியாத நிலை இருக்கிறது. காரணம், நாங்கள் என்னென்னெ கண்டிஷன்களை அணை கட்டுவதற்கான டிபிஆரில் கொடுத்தோமோ அதில் ஒன்றைக் கூட அவர்கள் ஃபுல்ஃபில் செய்யவில்லை. டிபிஆர் உங்களுக்கு வேண்டுமானால், தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் முழு ஒத்துழைப்பையும் நீங்கள் வாங்கி வர வேண்டும். காவிரி அத்தாரிட்டி உடைய ஒப்புதலையும் வாங்கி வர வேண்டும். அதன்பிறகு சென்ட்ரல் வாட் கமிஷனுடன் வாதிட்டு அதன் ஒப்புதலையும் வாங்கி வர வேண்டும். இப்படியெல்லாம் வந்தால்தான் உங்கள் டிபிஆரை நாங்கள் ஏற்போம் என தெரிவித்தோம். ஆனால் அவர்கள் நாங்கள் சொன்ன எந்தவிதமான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை. அவர்களாக நினைத்து அவர்களாக ஒரு டிபிஆரை அனுப்பியிருக்கிறார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனவே திட்டவட்டமாக மேகதாது அணை கட்டுவதற்கான கேள்வி எழவில்லை’ என மத்திய அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்.
நீங்கள் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட கண்டிப்பாக ஒப்புதல் அளிப்போம் என உங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியாகியிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினோம், அதற்கு, ‘நான் அதுபோன்ற வாக்குறுதியை எங்கேயும் கொடுக்கவில்லை’ என தெளிவாக கூறிவிட்டார்'' என்றார்.